ஞாயிறு, 14 ஜூன், 2015

"கிங் மேக்கர்' காமராஜர்

"கிங் மேக்கர்' காமராஜர்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார். விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமராஜின் அன்னையார் பெயர் சிவகாமி. மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு
 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர் என்றும் அறியப்படுகிறார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..
ஊசி முதல் விமானம் வரை இறக்குமதிகள் செய்யப்பட்டுக் கொண்டு இருந்த நாட்டில், எல்லாமே சுதேசிக் கண்ணோட்டத்தோடு இந்தியாவிலேயே உற்பத்திகள் செய்யப்பட்டன.

பெங்களூரில் விமானத் தொழிற்சாலை, ஆவடியில் டாங்க் தொழிற்சாலை, பெரம்பூரில் இரயில் பெட்டித் தொழிற்சாலை, விசாக்ப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தொழிற்சாலை, இரும்புத்தொழிற்சாலை, உருக்குத் தொழிற்சாலை, நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம், சேலத்தில் ஸ்டீல் தொழிற்சாலை. திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை. இப்படி இந்தியா வலுவடைந்து கொண்டிருந்தது.
இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
நோயினால் மடிந்தவர்களைவிட பயத்தினால் இறந்தவர்களே அதிகம்” என்பார்கள். எதற்கெடுத்தாலும் நாளும் பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு.

“
அஞ்சி அஞ்சி சாவார் – அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”

என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் தெளிவாக நாட்டு மக்களின் நிலையை அன்றேபடம் பிடித்துக் காட்டினார். “கோழையாய் வாழ்வதைவிட வீரனாகச் சாவதே மேல்” என்பது நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் கருத்தாகும்.

நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். நாட்டுக்காக – விடுதலைக்காக, பாடுபட்ட நல்லவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், காமராஜர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்தது.

1949
ஆம் ஆண்டு திருச்சியில் ஒருபொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது சிலர் குழப்பம் உண்டாக்க வெடிகளை வீசினார்கள்.

மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.

உடனே காமராஜர் “கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி வெடிப்பதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது” என அஞ்சாது உரையாற்றினார். கூட்டம் அமைதியானது.
பாரதத்தை காதலித்த
தன்மான தலைவனே
‘
விருது’ நகர் கண்டெடுத்த
பச்சைத் தமிழனே

படித்திடாத மேதையென்று
வரலாற்றில் பெயரெடுத்தவனே
கல்வி பயில்வோர்க்கு
பாலமாய் இருந்தவனே

சிறைபுகுந்நு தேசசேவை
செய்த மாவீரனே
கறைபடியாத அரசியலை
செய்த முதல்வனே

காந்தி மகான்வழியில்
புரட்சிகள் செய்தவனே
பதராடை போல
மனம் உடையவனே

தமிழகம் கண்டெடுத்த
இன்னொரு மகாத்மாவே
நீ வருவாய் என
காத்திருக்கிறேன்

பெருந்தலைவா!
பேரன்புத் தவச் செல்வா!என்றும் நிலைத்து நிற்கட்டும் அய்யா காமராஜர் புகழ்..
எங்களுக்காக எங்கும் கல்விக் கூடங்கள் திறந்தாய்...
சீருடைத் திட்டத்தினால் பள்ளிகளில் ஏழை, பணக்காரன் பிள்ளைகள் என்கிற பாகுபாடுகள் நீக்கினாய்...
இலவ(ச மதிய உணவுத் தந்தாய்...
அரசு செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளித்தாய்...
எல்லாக் கிராமங்களிலும் இரவுப் பாடசாலைகள் திறந்தாய்...
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் அதில் எதிலாவது உனக்கான முத்திரையோ, அடையாளமோ உண்டோ...?
எல்லாக் கல்விகூடங்களிலும் உன் படமாவது உண்டா...?
உன்னால் படித்த எங்களை தவிர உனக்கு வேறு அடையாளம் உண்டா...?
எம் "பச்சை தமிழரே" பார்த்தீரா இன்றைய தலைவர்களை,
இவர்கள் அறிமுகம் படுத்தும் ஒவ்வொன்றிலும் இவர்களது அடையாளங்களை...


ஒருமுறை, மகாத்மாவைக் கண்டித்து மிக நீளமான கடிதம் ஒன்றை ஒருவர் எழுதியிருந்தார். அதைப் படித்துப் பார்த்த காந்திஜி, அதிலிருந்த குண்டூசியை மாத்திரம் எடுத்துக்கொண்டு, கடிதத்தைக் கிழித்தெறிந்தார். 'இந்தக் கடிதத்தில் குண்டூசி ஒன்றுதான் பயனுள்ளது’ எனச் சிரித்தபடியே சொன்னாராம். அப்படிப்பட்ட திடமான உள்ளமே, மிகப் பெரிய எதேச்சதிகாரத்தை எதிர்க்கிற துணிவை நமக்குப் பெற்றுத் தந்தது.

காமராஜரைப் பற்றி சிலர் அவதூறு பரப்பினர்; நேர்மையாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, நிறைய சொத்துச் சேர்ப்பதாக எழுதினார்கள். அவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ''நான் நேர்மையானவன். என்மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுக்கெல்லாம் பதில் சொல்லி, என் நேர்மையை நிருபிக்கவேண்டிய அவசியம் இல்லை, எனக்கு யானைக்கால் நோய் இல்லை என்பதற்காக, எல்லோரிடமும் என் காலைத் தூக்கிக் காட்டவேண்டிய அவசியமில்லை'' என நறுக்குத்தெறித்தாற்போல் பதில் சொன்னார்.

கிருபானந்தவாரியார், ஒரு பொதுக்கூட்டத்தில், ""அனுமன் பிரம்மச்சாரி. கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து சாதனைகள் பல புரிந்தான். முக்கியமாக "கிங் மேக்கர்' ஆக இருந்தான். சுக்ரீவனுக்கு ஆட்சி கிடைத்தது. அனுமனின் துணை, இராமர் ஆட்சியை ஏற்கவும் உதவியது.

ஆக, பெரிய நோக்கத்தோடு பிரம்மச்சரிய விரதம் இருப்பவர்கள் எல்லோரும் கிங் மேக்கராக இருப்பார்கள்'' என்றார்.

உடனே கூட்டத்தில் பலத்த ஆரவாரமும் கை தட்டலும் எழுந்தது. அதற்குக் காரணம் , அந்த மேடையில் காமராஜரும் இருந்தார். அவர் பிரம்மச்சாரி. அதோடு அப்போது நேருவுக்குப் பின் இரண்டு பிரதமர்களைப் பதவியில் அமர்த்தி "கிங் மேக்கர்' என்ற பெயரை அவர் பெற்றிருந்தார்.

வாரியார், காமராஜரை ஆஞ்சநேயருடன் ஒப்பிட்டதை அனைவரும் ரசித்தார்கள். அதுமட்டுமல்ல, மேடையிலிருந்த காமராஜரும் வாய்விட்டுச் சிரித்தார்.

ஒரே போனில் பிரச்சினை தீர்ந்தது
--------------------------------------------
தமிழ்நாட்டின் உயர் அதிகாரிகளுக்கும் கேரளத்தின் உயர் அதிகாரிகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. தண்ணீரை எப்படி விட்டுக் கொடுப்பது? எந்த அளவு விட்டுக் கொடுப்பது? எந்த அடிப்படையில் விட்டுக் கொடுப்பது? என்று பிரச்சினை நீண்டு கொண்டிருந்தது.

இப்படியெல்லாம் காரியம் நடக்காது. நீங்கள் நேரடியாகக் கேரள முதல்-அமைச்சரிடம் பேசுங்கள் என்று காமராஜரிடம் சி.சுப்பிரமணியம் கூறினார்.
காமராசர் உடனே தொலைபேசியை எடுத்து, முதல்- அமைச்சர் நம்பூதிரிபாடுடன் பேசினார்.

ஏம்பா நாம் இந்தியாவில் தானே இருக்கிறோம். என் தண்ணீர் உன் தண்ணீர் என்று எங்கே எழுதப்பட்டுள்ளது? உன் ஆட்களுக்கு விபரம் போதாது. வா, நான் கையெழுத்து போட வேண்டும் என்றார். அவ்வளவுதான் முடிந்தது பேச்சுவார்த்தை!

எப்பேர்ப்பட்ட தலைமை என்று பாருங்கள். ``உன்னிடம் தண்ணீர் உள்ளது. கடலில் போய் வீணாகக் கலக்கிறது. எங்களிடம் நிலம் உள்ளது. தண்ணீர் இல்லாமல் காய்ந்து கொண்டுள்ளது. என்ன பிரச்சினை திருப்பிவிடுவதில்'' காமராசர் வெகு எளிதாகச் சொன்னார். கையெழுத்துப் போட்டாகிவிட்டது.

தேச நன்மைக்குத் திட்டமிடும்போது, வாக்குகள் கிடைப்பது குறைந்துவிடும் என்று நினைக்காமல் தேசமல்லவா முக்கியம் என எண்ணினார்.

திருப்பூர் மாவட்டத்தின் தென் பகுதியில் பாசனத் தேவைக்கும். கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கும் உள்ள ஒரே அணை அமராவதி மட்டுமே. கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மூணாறு பகுதியில் இருந்து நீர்வரத்து உற்பத்தியாகி, அங்கிருந்து 192 கி.மீ தொலைவு பயணித்து கரூர் மாவட்டத்தில் மாயனூர் அருகே திருமுக்கூடல் எனும் இடத்தில் காவிரியில் வீணாக கலந்து வந்த தண்ணீரை, எதிர்கால நலன் கருதி பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தேக்கி வைக்க வேண்டும் என்பதற்காக உடுமலை அருகே அமராவதி குறுக்கே அணை கட்ட உத்தரவு வழங்கியவர் பெருந்தலைவர் காமராஜர்.

காவிரியின் முக்கிய உபநதிகளில் அமராவதி ஆறு முக்கியமானதாக இருந்தது. 1958ல் தான் அமராவதி அணை கட்டி முடிக்கப்பட்டது. இது, கடல் மட்டத்திலிருந்து 353மீ உயரத்தில் உள்ளது. இதன் உயரம் 90 அடி, நீரின் மொத்த கொள்ளளவு 4 ஆயிரத்து 35 மில்லியன் கன அடி. அதாவது 8 டி.எம்.சி. இந்த அணை கட்டப்பட்ட பிறகு, இதன் மூலம் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 22 ஆயிரத்து 187.5 ஏக்கரும், பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 29 ஆயிரத்து 732.5 ஏக்கர் பாசனமும், நீரேற்று பாசனத்தில் 11 ஆயிரத்து 512.5 ஏக்கரும் என மொத்தமாக 63 ஆயிரத்து 437.5 ஏக்கர் பாசனம் பெற்று வந்தது. 

பழைய ஆயக்கட்டில் 15 தடுப்பணைகள் மூலமாக 25 வாய்க்கால்கள் வழியாக இருபோக சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. புதிய ஆயக்கட்டிற்கு அணையின் இடதுகரையில் தலை மதகு அமைத்து, 62.80 கி.மீ தொலைவுக்கு பிரதான கால்வாய் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் உடுமலை, தாராபுரம் தாலுகாவின் மற்றொரு பகுதி இருபோக சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. அணை கட்டப்பட்டு தற்போது 56 ஆண்டு ஆகிறது. அணையை சரி வர பராமரிக்காததால் அணையின் நீர் கொள்ளளவு குறைந்து போனது. இதனால் தற்போது ஒருபோக சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நூலாசிரியர் நாகூர் ரூமி அவர்களின் கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை நூலில் இருந்து .......

சுபா.ஏ .சுந்தரம் என்ற புகைப்படக்கலை நிபுணர் ஒருவர் ஒருமுறை காமராஜரின் அன்னையை பார்க்க ஆசைப்பட்டு , விருதுநகரில் இருந்த அவரத இல்லத்திற்கு சென்றார். சைக்கிள் ரிக்ஷாக்காரர் ஒரு தகவல் சொல்கிறார். காமராஜர் மாதம் மாதம் அனுப்பும் பணம் போதமலிருக்க ஊரிலுள்ள பிரமுகர்கள் சிலர் ஓன்று சேர்ந்து ஒரு சைக்கிள் ரிகஷா வாங்கி சிவகாமி அம்மையாருக்கு அன்பளிப்பாக கொடுத்தார்களாம் .. அந்த ரிக்ஷா மூலம வரும் சிறு தொகையை ஒவ்வொரு நாளும் அன்னையாரிடம் கொடுத்து வந்தார்களாம் ...

பெருந்தலைவரின் அன்னை வசித்த வீட்டில் போடப்பட்டிருந்த மேசை நாற்காலிகளில் "இன்னார் அன்பளிப்பு" என்று என்று எழுதி இருந்ததாம் ...

நண்பர்களே மண்ணுக்கு மரம் மழையைத்தரும் அந்த மகராசன் நினைவு நம் சமுதாயத்திற்கு
நல்ல எதிர்காலத்தை தரும். இப்படி ஒரு தலைவன் நம்மில் தோற்றி மறைந்தார் என்ற செய்தியை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள் ....

குழந்தைகள் மேல் உள்ள பாசம் :

பெருந்தலைவர் காமராஜருக்கு பால மந்திர் காப்பக குழந்தைகளிடம் தனி பிரியம் இருந்தது . அங்கிருந்த 400 குழந்தைகளுக்கும் அவர் ஒரு அன்பான தந்தையை போல பாசத்துடன் இருந்தார்.

அவருக்கு அன்பளிப்பாக எந்த பொருள் கிடைத்தாலும் அவற்றில் தனக்காக எதையும் எடுத்துக் கொள்ளாமல் பாலா மந்திர் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார்.
அனாதைகளுக்கு ஆதரவு கொடுப்பவன் இறைவனுக்கு பணிபுரிவது போல சிறப்பானது என்பதை உணர்த்தினார் நம் பெருந்தலைவர் !!!

களம் கண்ட காமராசர் 
********************
1965
ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் மூமூண்டது. நேருவின் மறைவிற்குப் பின் இந்தியத் தலைமை பலவீனமாக இருக்கும் எனவே படையெடுப்பின் மூமூலம் மிரட்டிப் பணிய வைக்கலாம் எனப் பாகிஸ்தானின் இராணுவச் சர்வாதிகாரி அயூப்கான் கருதினார்.

ஆனால் பிரதமர் லால்பகதூர், காங்கிரசுத் தலைவர் காமராசர் ஆகியோர் இணைந்து காட்டிய மன உறுதி உலகைவியக்க வைத்தது. பகைவரைத் திகைக்க வைத்தது.

பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த போர் முனைக்குச் சென்று வீரர்களைச் சந்தித்து உற்சாகமூமூட்ட காமராசர் விரும்பினார். அவர் விருப்பத்தை அறிந்த பிரதமர் லால்பகதூரும், குடியரசுத் தலைவர் இராதா கிருஷ்ணனும் திடுக்கிட்டு அவரைத் தடுக்க முயன்றனர்.

ஆனால் கர்மவீரரோ பிடிவாதமாக இருந்தார். வேறு வழியில்லாமல் பிரதமர் அவர் விருப்பத்திற்கு இணங்கினாலும், காமராசரைப் பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு இராணுவத்திற்கு ஆணையிட்டார்.

களத்திற்குக் காமராசர் செல்லுவது மிக இரகசியமாக வைக்கப்பட்டது. பஞ்சாபில் எல்லைப் பகுதியில் இரு தரப்புப் படைகளும் எதிரெதிரே அணிவகுத்து நின்றன.

எல்லைப் பகுதியில் காவல் காக்கும் நமது வீரர்களைச் சந்திக்க வேண்டும் என காமராசர் கூறியபோது படைத்தளபதி திடுக்கிட்டு விட்டார்.

ஐயா! வெள்ளை வேட்டி - சட்டையுடன் தாங்கள் போர் முனைக்குச் செல்வது அபாயத்தை வரவழைப்பதாகும். எதிரிகளின் துப்பாக்கிக்குச் சுலபமான குறியாகும். எனவே அதைத்தவிர்ப்பது நல்லது எனப் பணிவுடன் எடுத்துக் கூறினார்.

அதற்குத் தலைவர் செவி சாய்க்காததைக் கண்ட அவர் அப்படியானால் கரும்பச்சை நிறக் கால்சட்டையும், மேல் சட்டையும் அணிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

அது கேட்ட தலைவர் கலகலவென நகைத்தார். என்னை வேஷம் போடச் சொல்லுகிறீர்களா? அது என்னால் முடியாது என மறுத்தார்.

வேறு வழியின்றிக் காமராசர் சென்ற வண்டியில் படைத் தளபதியும் ஏறிக்கொண்டு போர் முனை சென்றனர்.

காமராசரைச் சற்றும் எதிர்பார்க்காத வடநாட்டு வீரர்கள் காலாகாந்தி! காலா காந்தி! எனக் கூவி மகிழ்ந்தனர். அவரைச் சூழ்ந்து ஆரவாரித்தனர்.

இந்தியாவின் வரலாற்றில் அரசுப்பதவி எதிலும் இல்லாத ஒரு தலைவர் நமது உயிரைத் துச்சமாக மதித்துப் போர்க்களம் சென்று திரும்பியது இதுதான் முதலும் கடைசியுமாகும். அவருக்கு முன்போ அவருக்குப்பின்போ யாரும் இவ்வாறு துணிந்து சென்றதில்லை.

பிரதமர் லால்பகதூர் நன்றியுணர்வோடு காமராசரைப் பாராட்டினார். அந்த வேளையில் சென்னை ஆபட்ஸ்பரி மாளிகையில் நடைபெற்ற போர்நிதி பெறும் கூட்டத்தில் காமராசரை அருகே வைத்துக் கொண்டு பின்வருமாறு மனந்திறந்து பாராட்டினார்.

போர்க்களத்தில் நம் வீரர்கள் முன்னேறிக் கொண்டிருப்பதற்கு நமது அரசு எடுத்த முயற்சிகள்தாம் காரணம் என்றால் அதற்குத் தலைவர் காமராசரின் யோசனைகள் முக்கியமாக உதவின. அவர் எனது உடன் பிறவாச் சகோதரர். எனக்கு வழி காட்டியாக விளங்கி என் மூமூலம் நாட்டை நடத்திச் செல்கிறார். பகை முடிக்க அவர் கூறிய யோசனைகள் மிகப் பெரிய அளவில் உதவின என அவர் கூறிய போது பெரும் ஆரவாரம் செய்தனர் மக்கள்.


பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால்உருவானதே இந்த மாத்தூர்தொட்டிப் பாலமாகும் மாத்தூர்தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். இதுமலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில்உள்ள கணியான் பாறை என்றமலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக்கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது.

மாத்தூர்என்னும் கிராமம் திருவட்டாற்றிலிருந்து மூன்று கிலோமீட்டர்தொலையிலும், இந்தியாவின் தென்முனையாகிய கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் நாகர்கோவிலில் இருந்து 45கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இவ்வூர் குழித்துறை இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலையிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 70 கி.மீ. தொலையிலும் அமைந்திருக்கிறது.நம் நாட்டின் இருக்கும்மாத்தூர் தொட்டிப் பாலம்!! ஆசியாவிலே மிகவும்உயரம் ஆனதும் நீளமானதுமான மாத்தூர் தொட்டிப்பாலம், பார்க்குமிடங்கள ெல்லாம் நெருக்கமாகக்காணப்படும் தென்னை மரங்கள்....கோடைக் காலத்திலும்வற்றாத ஆறுகளென, கேரளத்தின் சாயலோடு காணப்படும் மலைப் பாங்கான பிரதேசம் மாத்தூராகும். தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலுக்கு அருகில் மாத்தூர் அமைந்திருக்கிறது.

ஒரு காலத்தில் மலைப்பாங்கான காடுகளாகவிருந்த கணியான் பாறையென்ற மலையையும்கூட்டு வாயுப் பாறையென்றமலையையும் இணைத்து, பறளியாற்று நீரைக் கொண்டுசெல்வதற்காக அவ்விரு மலைகளுக்கும் நடுவே இப்பாலம் அமைந்துள்ளது.அப்பகுதிகளுக்கான நீர்ப்பாசனவசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக அப்பிரதேசங்கள் மாறுமென எண்ணிய பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும்.

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, சென்னை, தாம்பரம் குடிசைவாசிகளுக்கும் பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியைத் திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியல் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார். ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந் தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட் டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு ஆச்சர் யப்பட்டு ""என்ன காமராஜ் என்று கேட் டார். " என்ன நீங்க இந்த வீட்டுல இருக் கீங்க? " என்று ஆதங்கப்பட்டார் காமராஜர். உடனே ஜீவா, ""நான் மட்டுமா? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத் தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார். காமராஜரை உட்கார வைக்க ஒரு நாற்காலிகூட இல்லாததால் இருவரும் நின்றுகொண்டே பேசினார்கள். " நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன் "என்றார் காமராஜர். "காமராஜ், நீ முதலமைச்சர். நீ திறந்தா போதும் என்று ஜீவா மறுக்க, "அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம் என்று அழைத்தார். " அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் " என்று அனுப்பி வைத்தார். "கண்டிப்பாக வரணும் " என்றார் காமராஜர். விழாவுக்கு அரை மணிக்குமேல் தாமதமாகவே வந்தார் ஜீவா. ""என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே ? " என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார். உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் லேட். தப்பா நினைச்சுக்காதே... என்றார். உடனே கண்கலங்கி விட்டார் காமராஜர். விழா நல்லபடியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை காமராஜரை மிகவும் வாட்டி யது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார். " ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போகமாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம் ? " என்றார். கூட்டத்தில் இருந்த ஒருவர், " ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும் " என்றார். உடனே காமராஜர், " ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விடமாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, "வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்கு ன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையைவிட வைச்சுடுவான் " என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு வேலை கொடுத்தார் காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது. காமராஜர் ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தை களால் வடிக்க முடியாதது. நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா. தனக்கு முடிவு வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."காமராஜருக்கு போன் பண்ணுங்கள்! "என்பதுதான்.


முதலமைச்சர் பதவியை துறந்தபின் வரலாறு சிறப்பு மிக்க ஒரிசா புவனேஸ்வர் மாநாட்டுக்கு புகைவண்டியில் பயணமானார் அதைதொடர்ந்து ஜனநாயக சோசலிசத்தை வலியுறுத்தி அகில இந்திய சுற்றுபயணம் மேற்கொண்டார் ..18 நாட்கள் 300 இடங்கள் . 2000 மைல்கள் சுற்றுபயணம் ...கிட்டத்தட்ட ஒருகோடி மக்களை சந்தித்தார் .... இந்த காலகட்டத்தில் தான் "காலா காந்தி "(கருப்பு காந்தி ) என்று அழைக்கப்பட்டார்.

நாம் தினந்தோறும் சாப்பிடும் நெல் , அரிசி இருகிறதே ஐ. ஆர்.20. ஐ.ஆர்.8 பொடி மிளகி, சம்பா, ரப்பர் சம்பா இது போன்ற பல நெல் ரகங்கள் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது ரஷ்யா, ஜப்பான் , ஜெர்மன் , இன்னும் பல நாடுகளில் இருந்து விமானம் மூலம் 10 படி அளவுகள் மாதிரிக்கு கொண்டு வந்து ஆடுதுறை , தஞ்சாவூர் ஜில்லாவில் சர்க்கார் விதை பண்ணையில் பயிர் செய்து உற்பத்தி செய்து வளர்த்த நெல்கள் என்பது குறிப்பிட தக்கது.விவசாயத்தை பெருக்கி அரிசி பஞ்சத்தை போக்க காமராஜர் தலைமையிலான ஆட்சி பல நடவடிக்கைகள் எடுத்தது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த நேரம் ,தனது அதிகாரிகளுடன் சுற்று பயணம் செய்துகொண்டிருந்தார்.

திரளான மக்கள் கூட்டத்திலும் சுலபமாக நெருங்க முடிந்த ஏழை மனிதர் ஒருவர் , "அய்யா எனக்கு எதாவது வேலை போட்டுக்கொடுங்கள் "என்று கையேந்துகிறார் .
அதிகாரிகள் அவசரகதியில் அவரை விசாரிக்கும் போது அவர் படிக்காதவர் ,பரம ஏழை என்று புரிகிறது .

அந்த ஏழை மனிதருக்கு எதாவது அரசாங்க வேலை போட்டு தர முதலமைச்சர் விரும்பினார். அதுபற்றி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த போது ,"படிக்காதவர் அதோடு அரசாங்க வேலை பார்க்கும் வயதுக்கான வரம்பையும் தாண்டியவர் "என்று விளக்கிய அதிகாரிகள் "சட்ட ரீதியாக அரசுவேலை கிடைக்க (கொடுக்க)வாய்ப்பு இல்லை என்பதையும் தெளிவு படுத்தினர். 

உடனே சட்டென முகம் வாடிப்போனது முதலமைச்சருக்கு .ஆனாலும் வேதனையை அதிகாரிகளிடம் கேள்விகுறியாக்கினார்"இல்லாத ஒரு ஏழைக்கு ஒரு வேலை கொடுத்து உதவ மாநிலத்தில் முதலமைச்சருக்கே கூட அதிகாரம் இல்லாமல் சட்டமா ?".
முதலமைச்சரின் வருத்தமான கேள்விக்கு உடனே தலைமை நிர்வாகி இப்படி பதில் சொன்னார் "ஆனாலும் போது நலன் கருதி முதலமைச்சர் தனது சுயசிந்தை மூலம் அச் சட்டத்தை மீற அச் சட்டமே இடம் கொடுகிறது .

முதலமைச்சர் முகத்தில் வருத்தம் மறைந்தது ."ஒரு ஏழைக்கு உதவுறதுனா என்ன ?போது நலன்னா என்ன? ரெண்டும் ஒன்னு தானே , இவருக்கு வாட்ச்மென் வேலை போட்டு ஆர்டரை அடிச்சிட்டு வாங்க .நான் கையெழுத்து போடுறேன் "என்றார் மகிழ்ந்தவாறே !!!
அதன் படியே அந்த ஏழைக்கு அரசு ஊழியர் வேலை கிடைத்தது .

அண்ணாவிற்கும் காமராஜருக்கும் உள்ள நட்பு :

அண்ணா முதல்வரான மூன்றாம் நாள் இரவு 11 மணிக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் டிரைவருடன் தலைவர் வீடுக்கு வந்தார்.காரை வெளியே நிறுத்தி விட்டு நடந்து வந்தார்.

தலைவர் மாடியில் படித்துக் கொண்டு இருந்தார்,தகவல் சொன்னதும் கீழே இறங்கி வந்தார் .இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள் காங்கிரஸ் தோல்விக்கு அரிசி தட்டுப்பாடும் ஒரு காரணம் .அரிசி தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி? என்று தலைவரிடம் ஆலோசித்தார் அண்ணா . விடைபெற்ற அண்ணாவை வழியனுப்ப தலைவர் போனார்.அப்போது தான் அண்ணாவின் கார் வீட்டின் வெளியே நிற்ப்பதுதலைவருக்கு தெரிந்தது "காரை ஏன் வெளியே நிறுத்திட்டிங்க ?"என்று கேட்ட படியே கூடவே போனார் ."நீங்க இருங்க நான் வருகிறேன் "என்று கூறி புறப்பட்டார் அண்ணா . 

இந்த நிகழ்ச்சி அய்யாவின் மெய் காவலர் திரு. கிருஷ்ணன் அவர்களின் அனுபவம் .இவர்கள் தான் உண்மையான தலைவர்கள் .மக்கள் நலனுக்காக ஆளும் கட்சி தலைவர் ,எதிர்க்கட்சி தலைவர் என்ற பேதம் பார்க்காமல் வாழ்ந்த மனிதர்கள் .இவர்களைத்தான் நாம் படிக்க வேண்டும்

காமராஜரின் திட்டமும் திடமும்!

அன்று அரசு நடந்த முறையையும், இன்று அரசுகள் நடக்கும் முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க ஓர் உதாரணம். "துக்ளக்' இதழில் (1976), "சோ' எழுதியது: என் சித்தப்பா தென்னிந்திய ரயில்வேயில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவர் விவரித்த நிகழ்ச்சி இது: சென்னையில், ரிசர்வ் வங்கி கட்டடத்தின் எதிரில், சுரங்கப்பாதை கட்டியிருக்கிறார்களே, அது பற்றிய செய்தி இது. அந்த, "சப்வே' கட்டுவதன் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசும், ஒரு பகுதியை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்று ஏற்பாடு.

அந்த, "சப்வே'யை எப்படி கட்டுவது, அதன் செலவுகள் என்ன, மத்திய, மாநில அரசுகள் அதை எப்படி பங்கீடு செய்து கொள்வது, "சப்வே' கட்டுவதில் என்ன விதமான இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கக்கூடும், அவற்றை எப்படி தவிர்ப்பது போன்ற பல பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில், மத்திய அரசின் சார்பாக, ரயில்வே அமைச்சர் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் காமராஜர் கலந்து கொண்டார். மத்திய - மாநில அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். "சப்வே' திட்டத்தின், "டெக்னிக்கல்' விவரங்களை எடுத்துச் சொல்வது என் சித்தப்பாவின் பொறுப்பாகிறது.

அவர் பேச ஆரம்பித்தார். காமராஜருக்கு ஆங்கிலம், புரியுமோ, புரியாதோ என்ற சந்தேகத்தில் அவர் தமிழில் பேச ஆரம்பித்து, "டெக்னிக்கல்' விவரங்களைத் தமிழில் சரியாக விளக்க முடியாமல் திணற ஆரம்பித்தார்.

அவரைப் பார்த்து, "எனக்கு புரியுமோ, புரியாதோன்னு தானே தமிழில் பேச முயற்சி பண்றீங்க? பரவாயில்லை. இங்கிலீஷிலேயே பேசுங்க. எங்கேயாவது ஒண்ணு, ரெண்டு பாயின்ட் புரியலேன்னா, நான் உங்களைக் கேட்டுக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார் காமராஜர். அதன் பிறகு என்னுடைய சித்தப்பா, "சப்வே' திட்டத்தை விவரித்துள்ளார்.

ஏதோ ஓரிடத்தில் அவரது பேச்சை நிறுத்தி, விளக்கம் கேட்டிருக்கிறார் காமராஜர். இதன் பிறகு விவாதம் ஆரம்பித்திருக்கிறது.

மத்திய அரசின் பிரதிநிதியாக வந்திருந்த மந்திரி, "இந்த, "சப்வே' கட்டுவதற்கு செலவு அதிகமாகும். எனவே, இதை இப்போது கட்ட முடியாது...' என்று பேசியிருக்கிறார். காமராஜருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. எழுந்தார்.

மத்திய மந்திரியை வெறித்துப் பார்த்து, "உட்காருய்யா; கட்ட முடியாதுன்னு சொல்லவா கான்பிரன்ஸ் போட்டோம்? எப்படி கட்டி முடிக்கிறதுன்னு தீர்மானம் செய்யத் தான் இந்த மீட்டிங்; ஏன் கட்ட முடியாதுன்னு காரணம் காட்டற மீட்டிங் இல்லை இது. "முடியாது, முடியாது'ன்னு சொல்லவா மந்திரியானீங்க, நீங்க? மந்திரின்னா, எப்படி செய்து முடிக்க முடியும்ன்னு வழி தேடறவன்; முடியாதுன்னு சொல்றவன் இல்லை.

"
முடியாதுன்னு சொல்லவா டில்லியிலேருந்து இங்கே வந்தீங்க? அங்கேயிருந்தே சொல்லியிருக்கலாமே! முடியாதாம்... முடியாது! இதுக்கா ஜனங்க ஓட்டுப் போட்டாங்க. நீ பேசாம உட்காரு; நான் பிரைம் மினிஸ்ட்டர்கிட்டே பேசிக்கிறேன்; "சப்வே' கட்டறோம்; அதான் முடிவு. எப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, விவரங்களை எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க...' என்று கூறிச் சென்றார் காமராஜர். "சப்வே' கட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த நான், காமராஜரின் செயல் ஆர்வத்தைக் கண்டு வியந்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துப் பேச ஆரம்பித்த அதிகாரியைக் கோபிக்கவில்லை. அவருக்கு நம்பிக்கை அளித்து, பேச ஊக்குவித்தார் - பெருந்தன்மை.

தனக்குப் புரியாத இடத்தில் புரிந்தது போல நடிக்கவில்லை. அர்த்தமும், விளக்கமும் கேட்டுப் புரிந்து கொண்டிருக்கிறார் - போலித்தனம் கலக்காத எளிமை.

முட்டுக்கட்டை போட முனைந்த மத்திய மந்திரியைத் தூக்கி எறிந்து பேசியிருக்கிறார் - செயல் ஆர்வம் அற்றவர்கள் மீது பீறிட்டெழும் கோபம்.

"
சப்வே கட்டுகிறோம். தீர்மானம் செய்து திட்டங்களை முடித்து வைக்கத்தான் ஜனங்க ஓட்டுப் போட்டிருக்கின்றனர்!' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் - மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் துடிப்பு.

"
பிரைம் மினிஸ்டரிடம் நான் பேசிக்கிறேன்!' என்று கூறியிருக்கிறார் - தன்னம்பிக்கை, அரசியல் செல்வாக்கு.

"
சப்வே' கட்டி முடிக்கப்பட்டது - சாதனை.

இப்படி இந்த ஒரு நிகழ்ச்சியில் அவரது பல குணாதிசயங்கள், பல கோணங்களில் வெளிப்பட்டு, அவர் எவ்வளவு மதிப்புக்குரியவர் என்று நினைத்துப் பார்த்து உணர்ந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம். காமராஜர் வாழ்ந்த விதத்தை ஆழ்ந்து நினைத்துப் பார்க்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.


ஒரு அரசியல் தலைவனது எண்ணம் எங்கு சென்றாலும் தனது மண்ணைப் பற்றியே இருக்கவேண்டும். விண்ணில் பறந்து வேறு வேறு நாடுகள் போனாலும் கண்ணில் தன் பிறந்த மண்ணே நிழலாட வேண்டும்.

ஒரு முறை பெருந்தலைவர் மணிப்பூருக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார்.

மணிப்பூர் இந்தியாவின் வடகிழக்கே அமைந்துள்ள இயற்கை எழில் கட்டிய தொட்டில் என்றே கூறலாம். ஏறத்தாழ தமது அண்டை மாநிலமான கேரளாவை ஒத்திருக்கும்.

எங்கும் மலைமுகடுகளும், மரங்களின் அணி வகுப்பும், செடி கொடிகளின் அலங்காரதோரணங்களும் வானத்தைப் பார்த்து வாவென்று அழைக்கும்.

சிற்றோடை சலசலப்பும் ஆற்று நீரின் அங்கலாய்ப்பும் காற்றுக்கு ஏற்றவாறு தப்பாது தாளம் போடும்.

எப்போதும் பச்சைப் பட்டாடை கட்டி எழில்காட்டும் மணிப்பூரின் சிறப்பை வார்த்தையில் வடிப்பதாக இருந்தால் அதுவே தனிக் கட்டுரையாகிவிடும். அத்தகைய மணிப்பூர் மாநிலத்தின் அன்றைய முதல்வராக இருந்தவர் சாலிஹா ஆவார். அவர் தலைவரை அந்த மாநிலம் முழுவதும் அழைத்துப் போய்க்காட்டினார்.

காமராஜர் இயற்கையைக் கண்டுகளிக்கும்போதெல்லாம் மணிப்புரி கண்ணில் தெரிந்தாலும் மனதில் என்னவோ சொந்த மண்ணின் சோகம் வந்து போகத்தான் செய்தது.

மணிப்பூர் முதல்வர் மணிப்பூரின் சிறப்புகளைச் சொல்லும்போது ‘ இங்குள்ள மணிப்புரி நடனம் இந்தியாவின் பிரபல நடனங்களில் ஒன்று’ என்றார். பரத நாட்டியம், கதக், கதக்களி, குச்சுப்புடி வரிசையில் மணிப்புரியும் ஒன்று என்பது உண்மைதான்.

ஆனால் கர்மவீரரின் கருத்தோ வேறாக இருந்தது. எந்த நிலம் செழிப்பாக இருக்கிறதோ அந்த நலத்தில்தான் கலைகள் யாவும் செழித்திருக்கின்றன என்ற எண்ணம் அவர் சிந்தனையில் மின்னலாக வெட்டியது.

நிலம் செழித்த நிலத்தில் வாழும் மனிதர்களுக்கு உழைப்பு குறைகிறது. நீருக்காக அலையத் தேவையில்லை. நினைத்த பயிர் நட்டு எளிதில் முழுமையாகப் பலன் பெறலாம்.

தொழில் எளிமையாக நடந்துவிடுவதால் பொழுதுபோக்க கலைகளை நாடும் நிலை தானாகவே உருவாகிவிடுகிறது.

இதை உணர்ந்த உத்தமத் தலைவர், ”மணிப்புரி நடனம் பிரபலம் என்கிறீர்கள்… அது சரிதான். உங்கள் மண்ணில் மழை எப்போதும் பெய்கிறது. விதைத்தால் போதும் வேறு வேலைகள் செய்யாமலே விளைந்து விடுகிறது. எங்கள் ராமநாதபுரத்தில் காலை முதல் இரவு வரை தண்ணீருக்காகவே அலையும் ஏழை உழவனுக்கு தோடி ராகம் எப்படித் தெரியும்” என்றார்.

எந்தச் சூழ்நிலையில் தன் சொந்த மண்ணைப் பற்றிப் பேசுகிறார் என்பதை சற்றுக் கவனியுங்கள்.

அந்த மண்ணில் செழிப்பு, தன் சொந்த மண்ணில் வறட்சி. செழிப்பால் கலைகள் பெருகுகின்றன. வறட்சியால் கவலைகள் பெருகுகின்றன.

மனிதனின் அன்றாடத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் அவனுள் வேறேந்த நாட்டமும் வேரூன்றாதுதான். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் மணிப்பூரில் இருந்து கொண்டு இராமநாதபுரத்தை ஒப்பிட்ட பெருந்தலைவரிடம் நாம் பாடம் கற்க வேண்டியது அவசியம்தானே!

1953 ல்,

பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது.

எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார்.

தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார்.

அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார்.

டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான்.

இதை உணர்ந்த வேங்கடராஜுலு நாயுடு அவர்கள் காமராஜ் அவர்களுக்கு மலாயாவில் இருந்து ஒரு கடிதம் எழுதினார்.

கடித்த்தின் கருத்து இதுதான். ‘ஜெனரல் டெம்ப்ளர் கண்டிப்பானவர், ஆடைப்பாதி, அலங்காரம் மீதி என்னும் குணம் உடையவர். எனவே தாங்கள் அவரைச் சந்திக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து ஒரு கோட் தைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்வதாக’ எழுதியிருந்தார்.

வேங்கடராஜுலுக்கு பயம்.’தலைவர் வந்தும் ஜெனரல் டெம்ப்லரைச் சந்திக்க செல்ல வேண்டும். காமராஜ் தனது வழக்கப்படி கைத்தறி ஆடைகளோடு வந்துவிடக்கூடாது’ -என்று மனம் வருந்தினார்.

டெம்ப்ளர் சாதாரண உடைகளை உடுத்தி இருப்பவர்களை மிகச் சாதாரணமாகவே மதித்து வெளியில் அனுப்பிவிடுவார். எனவே வேங்கடராஜுலு மனம் வருந்தியதில் உண்மை இருக்கிறது.

காமராஜ் வரும் விமானத்தை எதிர்பார்த்து கோலாலம்பூர் குதூகலித்தது. இந்தியத் தலைமகனைக் காண எங்கெங்கு பார்த்தாலும் தலைகள்!

வேங்கடராஜுலு சந்தேகப்பட்டது போலவே நடந்துவிட்டது.

விமானத்தை விட்டு காமராஜ் எப்போதும் போலவே வேட்டி சட்டையுடன் வெளிவந்ததைக் கண்டு கலங்கினார் அமைப்பாளர்.

எப்போதும் போல் சாதாரணமாக கதர் வேஷ்டி, சட்டை, துண்டுடன் தலைவர் தன் தாயகத்தை உடையில் சுமந்துபோய் உள்ளத்தைக் காட்டிக்கொண்டிருந்தார்.

அழைத்த வேங்கடராஜுலு அகம் நொந்தார். இனி தலைவர்பாடு கமிசனர்பாடு என்று நினைத்தவாறே தலைவர் கமிஷனரிடம் அழைத்துப்போனார். எப்படியோ தலைவரை எதிர்ப்பார்த்த ஜெனரல் எளிமையாகப் பார்த்ததும் அசந்துபோனார்.

காமராஜரை வெறுக்கவில்லை. மாறாக தலைவரிடம் தனியே இருந்து பல மணி நேரம் பேசினார் ஜெனரல் டெம்ப்ளர் அவர்கள். பேசி முடித்து தலைவரை வழியனுப்ப வந்தவர்களிடம் ஜெனரல் அவர்கள் காமராஜர் அவர்களின் எளிமை மிகவும் பிடித்துப்போனது’ என்று கூறி எளிமையை சிகரத்தில் ஏற்றினார்.

இன்றோ ஒருநாள் கூத்துக்காக ஒன்பது ஜோடி கோட் சூட் தைத்து ஒரு முறை மட்டுமே மகிழ்கிறார்கள் அரசியல்வாதிகள்.

அதன் பின் ஒரு முறை ரஷ்யா செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தபோதும், தனக்காகத் தைத்தகோட் சூட்டையே வேண்டாம் என உதறிவிட்டு அதே எளிய உடையுடனே சென்று வந்தார்.

ரஷ்யா குளிர் அதிகம் உடைய நாடு. இருந்தும் தோளில் ஒரு துண்டைப் போட்டுவிட்டு எப்போதும்போல் எதார்த்தமாக ஒரு வேஷ்டி சட்டையை அணிந்து வெற்றியோடு திரும்பி வந்தார் தலைவர்.

இந்தப் பயணத்துக்காக தைத்து தலைவர் அணியாத ஆடைதான் அவரது நினைவகத்தில் நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளது. எங்கும் இவர் அணிந்த ஆடை என்று காட்சிக்கு வைப்பதைதான் பார்த்திருக்கின்றோம். ஆனால் – இது ரஷ்யா செல்ல தொண்டர்களால் தைத்துக் கொடுக்கப்பட்ட ஆடை , இதை தலைவர் அணிய மறுத்துவிட்டார்.’ என்ற செய்தியுடன் அவ்வாடை காட்சியில் வைக்கப்பட்டுள்ளது உலகிலேயே நமது அரசியல் தலைவனின் நினைவிடத்தில் மட்டுந்தான்.

”காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையார்”
1961-ம் ஆண்டு பிரபல வார பத்திரிகை
ஒன்றுக்கு அளித்த பேட்டி...
************************************************************
“தங்கள் திருமகனைப் பற்றி தாங்கள் ஏதாவது சொல்ல வேண்டும்…”
“நான் என்ன சொல்லப் போறேன் அய்யா. எனக்கு
வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருஷம் உப்பைத் தள்ளி பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்கிறேன்..”
“சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா… என்று கேட்டபோது, அம்மூதாட்டியார் முறுவலித்தார்…”
“நல்லாச் சொன்னீங்கய்யா… அவன் மந்திரியாகி (முதல்வர்) ஏழெட்டு வருஷமாகுது. இதுவரைக்கும் நானங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன்…”
“போனால் ஒரு மாதம் இரண்டு மாதம் தங்கிவிட்டு வருவீர்களா…?”
“நல்லாச் சொன்னீங்கய்யா… தங்கறதாவது. போன உடனே, என்னை ஊருக்கு திரும்ப பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாக இருப்பானே! பட்டணம் பார்க்கணும்னா சுத்திப் பாரு, திருப்பதிக்கு போகணும்னா போயிட்டு வா… எல்லாத்தையும் பாத்திட்டு உடனே விருதுநகருக்குப் போய்ச் சேரும்பானே…!”
“இந்த வீட்டுக்கு வந்து உங்களைப் பார்ப்பாரா?”
“
உம்.. ஆறுமாசத்துக்கு ஒருக்கா வருவான். இப்படி வாசப்படி ஏறி உள்ளே வருவான். சவுக்கியமாம்மா?, என்று கேட்பான். இப்படியே திரும்பி, அப்படியே போயிடுவான். அவனுக்கு ஏது நேரம்?”
“மாசச் செலவுக்கு உங்களுக்கு பணம் அனுப்புகிறாரா?”
“
அனுப்பறான். பொட்டிக் கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்…”
“எவ்வளவு பணம் அனுப்பறாரு..?”
“120 ரூபாய்… பத்துமாய்யா? தண்ணி வரியே 13 ரூபா கட்டறேன். எனக்கு ஒரு மகள். அவள் புருஷன் இறந்து போயிட்டாரு. அவளுக்கு இரண்டு ஆம்பிளைப் பிள்ளைங்க. ஒருத்தன் வேலைவெட்டி இல்லாம இருக்கான். தங்கச்சி குடும்பம், குழந்தைங்கன்னு கவனிக்க மாட்டான். தங்கச்சி மகன்தானே.. ஒரு வேளை செஞ்சு வைப்பானா… செய்ய மாட்டான்யா.. மாசம் அந்த 120 ரூபாதான் கொடுப்பான். அதுக்குமேல செலவு செய்யக் கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான்… நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா… ரேசன் வந்தது பாருங்க. அப்ப இங்க வந்திருந்தான். அவனக் கேட்டேன். ‘என்னப்பா, இருந்த வீட்டிலும் கேப்பை சாப்பிட்டதில்ல, வந்த வீட்டிலயும் சாப்பிட்டதில்ல. இப்ப இப்படி கேப்பையும் கம்பும் போடறாங்களே… இதை எப்படி சாப்பிடறது.. நெல்லு வாங்கித் தரப்படாதா?’-ன்னு கேட்டேன்… ‘நெல்லுப் பேச்சுப் பேசாதே… ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணா…”ன்னு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா….”
(அதாவது காமராஜர் முதல்வராகும் முன்பு கூட அவர்கள் நெல்லு சோறு சாப்பிட்டவர்கள்.. ஆனால் அவர் முதல்வரான பிறகு கேப்பையும் கம்பும்தான் உணவு. முதல்வர் வீடாக இருந்தாலும், மக்களுக்கு என்னவோ அதுதான் தன் தாய்க்கும் என்பது பெருந்தலைவரின் கண்டிப்பான நிலைப்பாடு!)







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக